மும்பை செசன்ஸ் கோர்ட்டு கட்டிடத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து நாசம்


மும்பை செசன்ஸ் கோர்ட்டு கட்டிடத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 9 Jan 2018 3:15 AM IST (Updated: 9 Jan 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை செசன்ஸ் கோர்ட்டு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

மும்பை,

மும்பை போர்ட் பகுதியில், மும்பை செசன்ஸ் கோர்ட்டு உள்ளது. தினமும் காலை 11 மணிக்கு கோர்ட்டு பணிகள் தொடங்கும். இந்தநிலையில், செசன்ஸ் கோர்ட்டு கட்டிடத்தின் 3–வது மாடியில் காலை 7.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கோர்ட்டு அறையில் இருந்த ஆவணங்கள் மற்றும் மின்வயர்கள் எரிந்து நாசமாகின. காலை நேரம் என்பதால் கோர்ட்டுக்கு யாரும் வரவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையில் அண்மைகாலமாகவே தீ விபத்துகள் என்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் சாக்கிநாக்காவில் நொறுக்குதீனி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர்கள், 29–ந்தேதி லோயர்பரேல் கமலா மில் கேளிக்கை விடுதி தீ விபத்தில் 14 பேர், மரோலில் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என கொத்து, கொத்தாக பலியானார்கள்.

கடந்த சனிக்கிழமை காஞ்சூர்மார்க்கில் சினிமா ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story