பல்லடத்தில் பேக்கரியில் வைத்திருந்த 8 கிலோ போலி டீத்தூள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்திருந்த 8 கிலோ போலி டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொங்கலூர்,
பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பிரிவில் கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த வசந்தகுமார் (வயது 55) என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி தமிழ்செல்வன் அறிவுறுத்தலின்படி துறை அலுவலர் விஜயராஜா நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் அவரது கடையில் வைத்திருந்த டீத்தூளை ஆய்வு செய்ததில் அவை போலி டீத்தூள் என்பது தெரியவந்தது. மேலும் அவரது கடையில் வைத்து இருந்து போலி டீத்தூள் 8 கிலோவையும் பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:–
இந்த டீத்தூள் மிகவும் குறைவான விலையில் கிலோ ரூ.200–க்கு கிடைக்கிறது. தரமான டீத்தூள் ரூ.300–க்கு மேல் விற்கப்படுகிறது எனவே அதிக லாபத்தை எதிர்பார்த்து போலி டீத்தூளை வாங்கி பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனை பொதுமக்கள் குடித்தால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூளை தர பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இதன் முடிவு வந்தபின் பேக்கரி உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எங்கிருந்து இந்த டீத்தூளை வாங்கி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்று பல்லடம் பகுதியில் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு போலி டீத்தூள் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துறை அதிகாரி தெரிவித்தார்.