புதுக்கடை அருகே ஆட்டோவில் கடத்திய 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கடை அருகே ஆட்டோவில் கடத்திய 550 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கடை,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று காலை பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் ஜோஸ், வருவாய் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பயணிகள் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.
இதையடுத்து அந்த ஆட்டோவை அதிகாரிகள் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தேங்காப்பட்டினம் சந்திப்பு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். உடனே ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியிலும், பின்பகுதியிலும் 550 கிலோ ரேஷன் அரிசி மூடை, மூடையாக கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை ஆட்டோவுடன் பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர்.