6–வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: நாகர்கோவிலில் பஸ் தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டம்
நாகர்கோவிலில் பஸ் தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
தமிழக அரசுக்கும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. குமரி மாவட்டத்திலும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் நேற்று குமரி மாவட்டத்தில் 30 சதவீதம் பேர்தான் பணிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அரசு பஸ்களை தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் இயக்கி வருகிறார்கள்.
எனவே நேற்றும் குறைந்த அளவிலேயே பஸ்கள் ஓடின. மேலும் குமரி மாவட்டத்தின் பல குக்கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாத நிலையே இருந்து வருகிறது. இதன்காரணமாக கிராம மக்கள், பள்ளி– கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ– மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பஸ்கள் வராததால் பொதுமக்கள் ஆட்டோ, வாடகை கார், வாகனங்களில் கூடுதலாக செலவிட்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பணிக்கு வராத அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று வரை 2,600 தொழிலாளர்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன்பு நடந்த போராட்டத்தில் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகி சிவன்பிள்ளை, கனகராஜ். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. தயானந்தன், தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த பூதலிங்கம், பணியாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த விஜயகுமார் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நேற்று இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தொடர்பாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, “நாகர்கோவில் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 755 பஸ்களில் 548 பஸ்கள் குமரி மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டன. கிராமப்பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியூர்களுக்கும் வழக்கம்போல் பஸ்கள் செல்கின்றன. ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். அவர்கள் போக மற்ற பஸ்களை தற்காலிக பணியாளர்கள் இயக்கினர்“ என்றார்.