சேலம் தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்


சேலம் தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2018 4:00 AM IST (Updated: 10 Jan 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினர். முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்கள். சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக நிர்வாக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர்.

இதனால், மாலை 3 மணிக்கு மேல் ராமகிருஷ்ணா ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மண்டல போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொ.மு.ச. பொதுச்செயலாளர் மணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் செல்வகுமார், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகராஜ், ஏ.ஏ.எல்.எல்.எப். கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை அஸ்தம்பட்டி போலீசார் கலைந்துபோகும்படி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள், தொழிலாளர்கள் என 145 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் சிறிது நேரம் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் செல்வகுமார் கூறியதாவது:–

கடந்த 6 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் திரும்ப...திரும்ப கேட்பது, அரசு துறையில் உள்ள ஓட்டுனர்களுக்கு இணையான சம்பளம்தான். போக்குவரத்து கழக டிரைவர்கள் தினமும் 400 முதல் 700 கிலோ மீட்டர் தூரம் பஸ்களை ஓட்டிச்சென்று வருகிறோம். ஆனால், இதர அரசுத்துறை ஓட்டுனர்கள் ஒரு மாதத்திற்கே 400 கிலோ மீட்டர் தூரம்தான் வண்டியை ஓட்டுவார்கள். எங்களுக்கு ஏன், அரசுத்துறை ஓட்டுனர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கூடாது?. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் அறிவித்தபடி, போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கவேண்டும். 1.4.2013–க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தபடி பென்சன் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் பணம் ரூ.7 ஆயிரம் கோடியை அரசு அதிகாரிகள் சட்டவிரோதமாக செலவு செய்துள்ளனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு வேலைநிறுத்த தடை சட்டம் பொருந்தாது. தொழிற்சங்க தரப்பு நியாயத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக, கோர்ட்டு பிறப்பித்த வேலைநிறுத்த தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(அதாவது இன்று) காலை 11 மணிக்கு சேலம் கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு, போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story