காரமடையில் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சாய்வுதளம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு
காரமடையில் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சாய்வுதளம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பணிகளை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவையை அடுத்த காரமடையில் ரெயில்வே மேம்பாலப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் பெரும்பாலான பணிகள் முடிந்து உள்ளன. இந்த நிலையில் பாலத்தின் இருபுறமும் சாய்வு தளம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினர். இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்றன.
ஆனால் சாய்வுதளம் அமைக்க சாலையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஒன்று திரண்டு பணிகளை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் காரமடை இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்–இன்ஸ்பெக்டர் நெல்சன், கிராம நிர்வாக அலுவலர் தனசீலன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரெயில்வே மேம்பாலத்தில் சாய்வு தளம் அமைப்பதற்காக நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பணியை தொடங்கி உள்ளோம். இந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:– ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிக்காக எங்களது நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீட்டு வழங்கப்பட வில்லை. எனவே இழப்பீட்டு தொகை வழங்கிய பிறகு பணியை தொடர வேண்டும். நடப்பதற்கு கூட வழியில்லாமல் சாய்வு தளம் அமைக்க வந்ததால் எதிர்ப்பு தெரிவித்து அந்த பணியை தடுத்து நிறுத்த முயன்றோம். மேலும் எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிய பிறகு அதிகாரிகள் பணியை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.