வார்டு வரையறை செய்ததில் குளறுபடி; பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


வார்டு வரையறை செய்ததில் குளறுபடி; பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:33 AM IST (Updated: 11 Jan 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் வார்டு வரையறை செய்ததில் குளறுபடி காரணமாக பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டனர்.

சேலம்,

உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறைக்கான கருத்து தெரிவிக்க கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளவை குளறுபடியாக உள்ளதாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இதுபோன்ற குழப்பமும், குளறுபடியும் இருந்து வருகிறது. இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளன.

8-வது வார்டில் இருந்து 13-க்கு மாற்றம்

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 8-வது வார்டில் மறுவரையறை செய்தபோது, அந்த வார்டு வாக்காளர்களை பிரித்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள 13-வது வார்டு எல்லையான ஜான்சன்பேட்டைக்கு மாற்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதாவது 8-வது வார்டுக்குட்பட்ட பாண்டியன் தெரு, ஏற்காடு ரோடு, அன்புநகர், சீதாகார்டன், ராஜீவ்நகர் ஆகிய பகுதி வாக்காளர்கள் 6-வது வார்டுக்கும், ஆத்துக்காடு, ஆத்துக்காடு கரடு, செங்கோட கவுண்டர் சாலை வடக்கு, ஜெயபால் லைன், மேபிளவர் கார்டன், ரத்தினபுரி ஆகிய பகுதி வாக்காளர்கள் 13-வது வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மண்டல அலுவலகம் முற்றுகை

வார்டு மறுவரையறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் திரண்டு வந்து நேற்று சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் செல்வராஜிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் மேற்கண்ட பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி புதிய வார்டு மறுவரையறை முறையில் 8-வது வார்டில் இருந்து சம்பந்தமே இல்லாத 13-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். எனவே, 8-வது வார்டை பிரித்து அருகில் உள்ள 6 அல்லது 7-வது வார்டில் முழுமையாக சேர்க்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story