திருவள்ளூர் அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டிய வாலிபர்
திருவள்ளூர் அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் 9½ மணி நேரம் போராடி மீட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கொப்பூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கஜேந்திரன் (வயது 22). வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை காதலித்து வந்தார். இதை அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 வாரங்களுக்கு முன்பு கஜேந்திரன் தான் காதலிக்கும் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனையும், அப்பெண்ணையும் மீட்டு அழைத்துவந்து கவுன்சிலிங் கொடுத்தனர்.
அப்பெண்ணுக்கு 18 வயது நிறைவடையாததால் அவரை தாய் வீட்டுக்கே அனுப்பிவைத்தனர். அப்போது போலீசார் கஜேந்திரனை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். தான் காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லையே என கஜேந்திரன் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களிடம் கூறி அழுது புலம்பினார்.
கஜேந்திரன் நேற்று தனது பெற்றோரிடம் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி கூறினார். அவர் பகல் 12 மணியளவில் மனவேதனையுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். கொப்பூர் அரண்வாயல் செல்லும் சாலையின் ஓரம் சுமார் 260 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டார். தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை அங்கிருந்து இறங்கமாட்டேன் எனக்கூறினார்.
இந்த தகவல் பரவியதும் கஜேந்திரனின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் 200–க்கும் மேற்பட்டோர் அங்கே திரண்டனர். அவர்கள் கஜேந்திரனை கீழே வருமாறும், பேசி தீர்வுகாணலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் அவர் இறங்கவில்லை.
இதுபற்றி திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கும், மணவாளநகர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கூடுதல் சூப்பிரண்டு தில்லை நடராஜன், துணை சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர்கள் பாலு, டில்லிபாபு மற்றும் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்துவந்தனர்.
அவர்கள் கஜேந்திரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் ஒரு துண்டு சீட்டில், மீண்டும் எங்களை ஒன்றாக சேர்த்துவைக்கும் வரை கீழே இறங்கி வரமாட்டேன் என எழுதி கீழே வீசினார். பாதுகாப்புக்காக தீயணைப்பு துறையினர் 4 பெரிய பந்தல் துணிகளை டவருக்கு கீழே கட்ட முயன்றனர். இதை பார்த்த கஜேந்திரன், அவ்வாறு செய்தால் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டினார்.
அந்த இடத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பெற்றோரும், போலீசாரும் அவரை கீழே இறங்கும்படி கூறியும் இறங்கவில்லை. தனது மனைவி வந்தால் தான் இறங்குவேன் என கூறினார். இதனால் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்தது.
ஒருவழியாக போலீசார் கஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 9½ மணி நேரத்துக்கு பின்னர் இரவு 8.30 மணியளவில் தங்கள் வழிக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் டவரில் ஏறி கஜேந்திரனை மீட்டு கீழே கொண்டுவந்தனர். ஆம்புலன்சில் அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் நேற்று கொப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.