உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பெண் அதிகாரியை குடிபோதையில் தாக்கிய தலைமை ஆசிரியர் கைது


உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பெண் அதிகாரியை குடிபோதையில் தாக்கிய தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2018 5:00 AM IST (Updated: 11 Jan 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பெண் அதிகாரியை தாக்கிய தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம்,

சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் தன் விவர குறிப்பு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சின்னசேலம் அருகே கனியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் மணிவாசகம் (வயது 48) என்பவர் தனது தன் விவர குறிப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்வதற்காக நேற்று முன்தினம் மதியம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்குள் சென்ற அவர், அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியான (அலுவலக கண்காணிப்பாளர்) சற்குணத்திடம்(52), தனது தன் விவர குறிப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு கூறினார்.

அதற்கு அவர் ஆசிரியர்களே தான் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தப்பனை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே மணிவாசகம், சாந்தப்பனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிவாசகம் சற்குணத்தை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவரை சகஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்குப்பதிந்து தலைமை ஆசிரியர் மணிவாசகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தப்பன், தலைமை ஆசிரியர் மணிவாசகம் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.


Next Story