பாளையங்கோட்டையில் விடுமுறையில் செயல்பட்ட பள்ளிக்கூடம் முற்றுகை


பாளையங்கோட்டையில் விடுமுறையில் செயல்பட்ட பள்ளிக்கூடம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jan 2018 2:15 AM IST (Updated: 12 Jan 2018 7:25 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் விடுமுறையில் செயல்பட்ட பள்ளிக்கூடம் முன்பு இந்து அமைப்பினர் திரண்டு முற்றுகையிட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் விடுமுறையில் செயல்பட்ட பள்ளிக்கூடம் முன்பு இந்து அமைப்பினர் திரண்டு முற்றுகையிட்டனர்.

முற்றுகை

பொங்கல் திருநாளையொட்டி பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு நேற்று சிறப்பு விடுமுறை அறிவித்து இருந்தது. இதையொட்டி அரசு, தனியார் பள்ளிகள் நேற்று செயல்படவில்லை. இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளிக்கூடம் செயல்பட்டது. அங்கு மாணவிகளுக்கு ஆசிரியைகள் வகுப்புகளை நடத்தினர்.

இதுபற்றி அறிந்த பெற்றோர்கள் மற்றும் இந்து அமைப்பினர் அந்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டு நின்று முற்றுகையிட்டனர். பள்ளிக்கூடத்துக்குள் சென்று விளக்கம் கேட்டபோது துரத்தப்பட்டதால் அவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளிக்கூட நுழைவு வாசல் முன்பு நின்று கோ‌ஷமிட்டனர்.

வகுப்புகள் ரத்து

இதுகுறித்த தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்கூட நிர்வாகியிடம் விளக்கம் கேட்டனர். அப்போது ஆசிரியைகள் ‘‘அரசு பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவிகளுக்கு விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் தற்போது வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு குறைவான நாட்களே இருப்பதால், மாணவிகளின் நன்மை கருதியே இவ்வாறு வகுப்புகளை நடத்துகிறோம்’’ என்று கூறினர்.

ஆனால் போலீசார், வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மாணவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story