அந்தியூர், பெருந்துறையில் 2 குடிசை வீடுகளில் தீ விபத்து, பொருட்கள்– பணம் எரிந்து நாசம்
அந்தியூர், பெருந்துறையில் 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள்– பணம் எரிந்து நாசம் ஆனது.
ஈரோடு,
அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). அந்த பகுதியில் மூங்கில் கடை வைத்து உள்ளார். கடையையொட்டி உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் கடையின் மாடி பகுதியில் ஓலையிலான குடிசை வீடும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த குடிசை வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை கண்டதும் ராமசாமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், டி.வி., துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை எரிந்து நாசம் ஆனது. ‘தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை’ என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள விருப்பம்பதியை சேர்ந்தவர் மாணிக்கம் (50). கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை இவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். மேலும் இதுபற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த மொபட், சைக்கிள், பீரோ, கட்டில், துணி போன்ற பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை,’ என்றனர்.