கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அருகே தாழங்குடா என்கிற மீனவ கிராமம் உள்ளது. இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் பைபர் படகுகளில் தினசரி கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று காலை, வழக்கம் போல் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த வடிவேல்(வயது 30), விமல்(30), வல்லத்தான்(28), விஜய்(28), கருணாகரன்(25), இவர்கள் 5 பேரும் இன்று காலை ஒரு பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்த நிலையில், நேற்றும் கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் நடுக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அலைகள் மோதியதில் படகில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் படகில் உள்ளே கடல் நீர் உட்புக ஆரம்பித்தது.
இதையடுத்து, அவர்கள் படகு கடலில் மூழ்கி விடும் என்பதால், உடனடியாக செல்போன் மூலம் கரையில் உள்ள மற்ற மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 படகில் மீனவர்கள் வேகமாக சென்று, கடல் பகுதியில் அவர்களை தேடினர். சிறிது நேரத்தில், அவர்களை கண்டறிந்து பத்திரமாக 5 பேரையும் தங்களது படகில் மீட்டனர். பின்னர் ஓட்டை விழுந்த படகை தங்களது படகோடு சேர்த்து கட்டி கரைக்கு எடுத்து வந்தனர்.
நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பிய பின்னர் தான், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.