ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:30 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே ஒரே குடும்பத்தினர் 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி குணசுந்தரி (50), மகள்கள் சரண்யா (22), சுகன்யா (20). மகள் சரண்யாவுக்கும், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சரண்யா, தனது கணவர் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது மனைவியிடம் பேசிவிட்டு விக்னேஸ்வரன் வெளியே புறப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்று மாலை அக்கம் பக்கத்தினர் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கண்ணன் கடைக்கு சென்றனர்.

அப்போது கடை பூட்டியே கிடந்தது. பின்னர் அவர்கள், கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் உள்ள 2 அறைகளில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சரண்யாவின் கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story