கிணற்றில் மிதந்த தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை


கிணற்றில் மிதந்த தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jan 2018 3:45 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆவாரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 50), தொழிலாளி. இவருடைய மனைவி கமலா. ஜெயராமன் கேரளாவில் வேலைபார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயராமன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினார்கள்.

ஆனால் எங்கு தேடியும் ஜெயராமனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஜெயராமன் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

ஜெயராமன் நேற்று முன்தினம் நண்பர்கள் சிலருடன் சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணி வந்ததால் பயந்து அங்கிருந்து ஓடியதாகவும், அப்போது கிணற்றில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. ஜெயராமன் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story