மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமையால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டது அம்பலம் ஊழியர் கைது + "||" + Dowry has been razed to death with family Employee arrested

வரதட்சணை கொடுமையால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டது அம்பலம் ஊழியர் கைது

வரதட்சணை கொடுமையால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டது அம்பலம் ஊழியர் கைது
செம்பனார்கோவில் அருகே ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மகளிடம் அவருடைய கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் அவர்கள் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகளின் கணவரான கரூர் கலெக்டர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர், மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி குணசுந்தரி (50). இவர்களது மகள்கள் சரண்யா (22), சுகன்யா (20). சரண்யாவுக்கும் மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் விக்னேஸ்வரன் (29) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. விக்னேஸ்வரன், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.


சரண்யாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சரண்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனால் சரண்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் சரண்யா பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

4 பேர் தற்கொலை

கடந்த 13-ந் தேதி விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்க்க ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது விக்னேஸ்வரனுக்கும், சரண்யாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் விக்னேஸ்வரன் அங்கிருந்து வெளியே சென்றார். இந்நிலையில் கண்ணனின் மளிகை கடை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு வீட்டில் உள்ள 2 அறைகளில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறிகளில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

கைது

இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஸ்வரன், அவரது மனைவி சரண்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதும், இதனால் மனமுடைந்த கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பெண் வன்கொடுமை, வரதட்சணை தடுப்பு, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர். விக்னேஸ்வரனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.