மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டில் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் + "||" + In the Jallikulam, 400 bulls were stripped by the players

ஜல்லிக்கட்டில் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

ஜல்லிக்கட்டில் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
திருச்சி அருகே பெரியசூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் 31 பேர் காயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை போன்று, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பெரியசூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கலுக்கு மறுநாள், அதாவது மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடத்தப்படுவது வழக்கமாகும்.


சுப்ரீம் கோர்ட்டு விதித்திருந்த தடையால் இங்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு தடை நீங்கினாலும் தாமதமாக கிடைத்த அனுமதியால் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மக்கள் உற்சாகம்

இந்நிலையில் இந்த ஆண்டு பெரியசூரியூரில் ஜனவரி 15-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், பெரியசூரியூர் பொதுமக்களும், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்களிடம் காளைகளை பதிவுசெய்தல், வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்தல் போன்றவை நடந்து வந்தன. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

அணிவகுத்து வந்த காளைகள்

ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பெரியசூரியூர் கருப்பண்ணசாமி கோவில் திடலில் பொங்கல் திருநாளான நேற்று முன்தினமே வாடிவாசல், காளைகளை அவிழ்த்து விடுவதற்கான மைதானம், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான வி.ஐ.பி. மாடம் ஆகியவை அமைக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தன.

ஜல்லிக்கட்டையொட்டி நேற்று அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை, மற்றும் புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.

மருத்துவ பரிசோதனை

மொத்தம் 550 காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் முருகேசன் தலைமையில், துணை இயக்குனர் எஸ்தர் ஷீலா உள்பட 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 50 காளைகள் தகுதியின்மை காரணமாக போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தகுதிபெற்ற காளைகள் அவற்றின் உரிமையாளர்களால் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்டன.

காளைகளுக்கு ஒருபுறம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றதைபோல், இன்னொரு பகுதியில் காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 450 வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில், 400 பேர் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, காளைகளை அடக்குவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு மைதானத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடி நின்றனர்.

வலம் வந்த கோவில் காளை

இந்நிலையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி காலை 9 மணி அளவில் தொடங்கியது. ப.குமார் எம்.பி. கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் உள்பட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். முதலில் கோவில் காளைக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டது.

அந்த காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடுவதற்கு முன்பாக ‘இது கோவில் காளை, யாரும் அதனை அடக்க முயற்சிக்க கூடாது’ என ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே அந்த காளை வாடிவாசலில் இருந்து வெளியே வந்ததும் துள்ளிக்குதித்து ஓடி மைதானத்தை வலம் வந்தது. ஆனால் யாரும் அதனை அடக்க முற்படவில்லை.

தூக்கி வீசின

அதன்பின்னர் பெரியசூரியூரை சேர்ந்த 15 காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையை விடுவதற்கு முன்பாகவும் அதன் உரிமையாளர் பெயர், அதனை அடக்கினால் வழங்கப்படும் பரிசு பொருட்கள் பற்றி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் மைதானத்தில் நின்ற வீரர்கள் காளையை அடக்கி பரிசை பெறவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். மூக்கணாங்கயிறை உருவியதும், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சூழ்ந்துகொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை கட்டிப்பிடித்தும், அடக்க முயன்றனர்.

ஆனால் பல காளைகள் மாடுபிடி வீரர்களை அனாயசமாக தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு, எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி களிப்புடன் ஓடின. அப்படி ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள் வீரர்களின் உடும்பு பிடியில் சிக்கி துள்ள முடியாமல் அடங்கின. அந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேரம் குறைவாக இருந்ததால் போட்டியில் 400 காளைகள் மட்டுமே களம் இறக்கப்பட்டன.

31 பேர் காயம்

காலை 9 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிக்கு முடிந்தது. காளைகளை அடக்க முயன்றவர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 31 பேர் சிறு சிறு காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 6 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுரசிக்க ஏராளமானவர்கள் கூடியதால் பெரிய சூரியூர் நேற்று திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. மரங்களிலும், வீட்டு மாடிகளிலும் ஏராளமானவர்கள் நின்றுகொண்டு, வீரர்கள் காளைகளை அடக்குவதை வேடிக்கை பார்த்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை தடுப்பதற்காக 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தீயணைப்பு துறையினரும் தயார்நிலையில் வாகனத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.