ராகவேந்திரர் மடத்தை கைப்பற்ற அனுமதிக்கமாட்டோம் இந்து அமைப்புகள் அறிவிப்பு


ராகவேந்திரர் மடத்தை கைப்பற்ற அனுமதிக்கமாட்டோம் இந்து அமைப்புகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள ராகவேந்திரர் மடத்தை கைப்பற்ற அனுமதிக்கமாட்டோம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை வடவாற்றங்கரையில் ராகவேந்திரர் மடம் உள்ளது. இந்த மடத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்திராலயத்தை சேர்ந்தவர்கள் கைப்பற்றபோவதாக தகவல் வெளியானது. இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மடத்தை கைப்பற்றுவதற்கு இடைக்கால தடையை கோவில் நிர்வாகம் பெற்றுள்ளது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிவசேனா கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார், அகில பாரத இந்து மகாசபை மாநில துணைத்தலைவர் சாம்பவைத்தியநாதன், இந்து இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் பழ.சந்தோஷ்குமார், பொதுச்செயலாளர் சரவணன், பா.ஜ.க.வை சேர்ந்த ஈசானசிவம் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் சசிகுமார், சாம்பவைத்தியநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை வடவாற்றங்கரையில் ராகவேந்திரசாமிகள் 12 ஆண்டுகள் தங்கி இருந்து தவம் செய்தார். இங்கு தான் அவருக்கு தீட்சை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மடத்தை தர்மகர்த்தா நியமித்து நிர்வகித்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மடத்துக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராகவேந்திர மந்திராலயத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் இந்த மடத்தை மந்திராயத்தை சேர்ந்தவர்கள் கைப்பற்ற கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள்.

தற்போது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது. இதனை அனுமதிக்கமாட்டோம். இந்த மடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மந்திராலயத்தை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் எங்களுக்கு தான் சொந்தம் என்பதை நிரூபித்துவிட்டு வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த மடத்தை கைப்பற்ற நடைபெறும் முயற்சிக்கு இடைக்காலதடை தஞ்சை கோர்ட்டில் பெறப்பட்டுள்ளது. அதையும் மீறி முயற்சி மேற்கொண்டால் மக்களை திரட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்திராலயத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story