என்ஜினில் பழுது ஏற்பட்டதால் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்


என்ஜினில் பழுது ஏற்பட்டதால் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jan 2018 11:00 PM GMT (Updated: 2018-01-19T01:51:17+05:30)

என்ஜினில் பழுது ஏற்பட்டதால் கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில்கள் தாமதமாக சென்றன.

குடியாத்தம்,

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தினமும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னைக்கு செல்கிறது. இதே ரெயில் சென்னை சென்ட்ரல் சென்றடைந்ததும் அங்கிருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பெங்களூருக்கு திரும்பும்.

பெங்களூருவிலிருந்து புறப்பட்டு வரும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்தில் நின்று செல்லும். நேற்று காலை அந்த ரெயில் வழக்கம்போல் காலை 11.25 மணி அளவில் குடியாத்தம் ரெயில் நிலையத்துக்குள் வருவதற்கு சில அடி தூரத்தில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ரெயிலை குடியாத்தம் ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நிறுத்தினர்.

ரெயில் வெகுநேரம் ஆகியும் புறப்படாததால் பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர். மேலும் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம் மற்றும் சென்னைக்கு செல்பவர்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்தை வந்தடைந்ததும் அங்கு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளும், பழுதாகி நின்ற ரெயிலில் இருந்த பயணிகளில் சிலரும் இன்டர்சிட்டி எக்ஸ் பிரஸ் ரெயிலில் ஏறினர். பின்னர் ரெயில் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் இருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு காலதாமதமாக சென்னைக்கு சென்றது. வழக்கமாக பகல் 1.45 மணிக்கு செல்ல வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்றடைந்தது.

இதனிடையே கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் நிறுத்தினர். பின்னர் அதிலிருந்த 2 என்ஜின்கள் பிரிக்கப்பட்டு பழுதான கே.எஸ்.ஆர். ரெயிலுடன் இணைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன் காரணமாக சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரெயில்கள் சற்று தாமதமாக சென்றன. 

Next Story