ரூ.16 ஆயிரம் கட்டினால் 1 பவுன் நகை என ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி


ரூ.16 ஆயிரம் கட்டினால் 1 பவுன் நகை என ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி
x
தினத்தந்தி 18 Jan 2018 10:45 PM GMT (Updated: 18 Jan 2018 8:58 PM GMT)

ரூ.16 ஆயிரம் கட்டினால் 1 பவுன் நகை பெறலாம் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர், அழகுநிலையம் நடத்திய பெண் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

ஓமலூர்,

ஓமலூர் சின்னமாரியம்மன் கோவில் தெருவில் விரைவில் சரவணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் புதிதாக நகைக்கடை திறக்க உள்ளதாகவும், ரூ.16 ஆயிரம் கட்டினால், 40 நாட்கள் கழித்து ஒரு பவுன் நகை பெறலாம் என்றும், 5 பவுனுக்குரிய பணத்தை செலுத்தினால் கூடுதலாக ஒரு பவுன் இலவசமாக வழங்கப்படும் எனவும் உள்ளூர் தொலைக் காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

அதை நம்பி ஓமலூர், மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நாட்கள் ஆன பின்னரும், நகையோ அல்லது பணமோ அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி அருகே உள்ள நாச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் ஓமலூர் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில், கருமலைக் கூடலை சேர்ந்த தீபக்குமார்(வயது33), வேலக்கவுண்டன் புதூரை சேர்ந்த அன்பரசி(30) ஆகியோர் ஓமலூரில் விரைவில் நகைக்கடை திறக்க உள்ளதாகவும், ரூ.16 ஆயிரம் செலுத்தினால் திறப்பு விழா அன்று அதாவது 40 நாட்கள் கழித்து ஒரு பவுன் நகை வழங்கப்படும் என ஆசைவார்த்தை கூறினர். அதை நம்பி ரூ.45 ஆயிரம் பணம் செலுத்தினேன். தற்போது கடையும் திறக்கப்படவில்லை. பணத்திற்கான நகையும் தராமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 200-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஓமலூர் போலீசார் நேற்று தீபக்குமார், அன்பரசி ஆகியோரை கைது செய்தனர். கைதான தீபக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். அன்பரசி ஏற்கனவே, அழகுநிலையம் வைத்து நடத்தி வந்தவர் என்றும், சமீபகாலமாக தீபக்குமாருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.


Next Story