கோடிக்கணக்கில் மோசடி செய்த பணம் எங்கே? நடிகை சுருதியின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிப்பு


கோடிக்கணக்கில் மோசடி செய்த பணம் எங்கே? நடிகை சுருதியின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 4:15 AM IST (Updated: 21 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகை சுருதி மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்தார்? என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக வங்கி கணக்கு விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற சினிமாவில் நடித்து உள்ளார். அது இன்னும் வெளியாகவில்லை. இவர் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை திருமண ஆசைகாட்டி மடக்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சினிமா நடிகை சுருதி, அவருடைய தாய் சித்ரா, தம்பி சுபாஷ், உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

நடிகை சுருதி உள்பட 4 பேரும் வேறு ஏதாவது மோசடிகளில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த அவர்களை தனிப்படை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் சுருதி போலீசாரின் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை. ஆனால் அவரது தாயார் சித்ராவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

சுருதி மீது சென்னை குற்றப்பிரிவு, நாகை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நாமக்கல், கடலூர், திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. சுருதி பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மோசடி செய்த பணத்தை அவர் முதலீடு செய்துள்ளாரா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். மோசடி பணத்தை அவர் ஆடம்பரமாக செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சுருதியின் பெயரில் உள்ள 3 வங்கி கணக்குகளின் விவரங்களை நாங்கள் கேட்டுள்ளோம். பணத்தை பறி கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கி மூலம் தான் பணத்தை அனுப்பியுள்ளனர். எனவே யார்-யார்? எவ்வளவு பணத்தை சுருதிக்கு அனுப்பினார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக வங்கி நிர்வாகங்களிடம் கணக்கு விவரங்களை கேட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்ததும் நடிகை சுருதியிடம் ஏமாந்தவர்கள் வேறு யாராவது உள்ளார்களா? என்பதும் தெரிந்து விடும். அது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story