பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சத்தியமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்,

தமிழகத்தில் 19-ந் தேதி இரவு திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஈரோடு-கோவை பிரிவு ரோட்டில் நேற்று காலை ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் 7 பெண்கள் உள்பட 27 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 27 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த திடீர் சாலை மறியலால் ஈரோடு-கோவை பிரிவு ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கோபி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கெம்பராஜ் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50 பேர் கலந்துகொண்டனர்.

பவானி அந்தியூர் பிரிவு சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story