பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட 72 பேர் கைது


பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட 72 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து, சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 72 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கோவில்பட்டி-குருமலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி,

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்திதோப்பு கிராமத்துக்கு செல்ல மினி பஸ்கள், தனியார் பஸ்களில் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோன்று அரசு டவுன் பஸ்களிலும் ரூ.10 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. பஸ் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி குருமலை ரோடு- மந்திதோப்பு விலக்கில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, கிளை செயலாளர் முப்பிடாதி, தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ், தாலுகா குழு உறுப்பினர் துரைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே, கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, முருகய்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட 43 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்தனர். இதனால், கோவில்பட்டி- குருமலை ரோட்டில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story