காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு


காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் பலியான காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் பாலோபநந்தவனம் பகுதியில் வசித்துவந்தவர் ஆடிட்டர் சாமிநாதன் (வயது 48). இவர் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை கீழவாசல் கோட்ட தலைவராக இருந்தார். இவருடைய மனைவி சித்ரா (47). இவர் தஞ்சை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியாக உள்ளார். கடந்த 15.10.2016 அன்று திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு ஆடிட்டர் சாமிநாதனும், அவருடைய மனைவி சித்ராவும் அன்று மாலை 3 மணியளவில் காரில் தஞ்சைக்கு திரும்பினர்.

திருச்சி சாலை தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள், சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சாமிநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மற்றொரு விபத்து

இதேபோல, தஞ்சையை அடுத்த வல்லம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (38). நெல் மற்றும் நவதானிய வியாபாரி. இவர் கடந்த 15.12.2016 அன்று தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்த தன்னுடைய மகனை அழைத்துவர காரில் சென்றுகொண்டிருந்தார். மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதாகோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த துரைராஜ் இறந்தார். மேற்கண்ட 2 விபத்துகள் குறித்தும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூ.47 லட்சம் இழப்பீடு

இந்த நிலையில் இழப்பீடு கோரி வெவ்வேறு விபத்துகளில் பலியான ஆடிட்டர் சாமிநாதன் மனைவி சித்ரா, துரைராஜ் மனைவி அனுராதா (36) ஆகியோர் தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், விபத்தில் பலியான சாமிநாதன் குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க சேலம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளருக்கும், துரைராஜ் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 410 வழங்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கும் உத்தரவிட்டார். 

Next Story