பஸ் கட்டணம் முழுவதையும் திரும்ப பெறக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்


பஸ் கட்டணம் முழுவதையும் திரும்ப பெறக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:30 AM IST (Updated: 29 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் முழுவதையும் திரும்ப பெறக்கோரி கோடிமுனையில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசு வாகனத்தையும் சிறைபிடித்தனர்.

குளச்சல்,

குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் அனைவரும் நேற்று மதியம் 3 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஆலயம் முன்பு திரண்டனர்.

பின்னர், அவர்கள் ஆலயத்தின் முன்பு உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்திய கட்டணத்தை முழுவதையும் அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது போலியோ சொட்டு மருந்து வழங்குவதை ஆய்வு செய்வதற்காக முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆய்வாளர் ஐசக் ஆபிரகாம் அரசு வாகனத்தில் வாணியக்குடி, குறும்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக கோடிமுனை வழியாக சென்றார். இதைக்கண்ட மறியலில் ஈடுபட்ட பெண்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த கோடிமுனை ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் ஹென்றி விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து 2 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், சிறைபிடிக்கப்பட்ட அரசு வாகனத்தையும் விடுவித்தனர். 

Next Story