மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் நிறுத்தப்பட்டது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் இருக்கும் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ தண்ணீர் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் அணை நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என எதிர்பார்த்து கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் உள்பட 12 மாவட்டங்கள் பயன்பெற்றன.

இவ்வாறு பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி 28-ந்தேதியுடன் நிறுத்தப்படும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக 79 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. தற்போது பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதால் நீர்மின் நிலையத்தில் நடைபெற்று வந்த மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 44.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.


Next Story