கர்நாடகத்தில் போலியோ பாதிப்பு இல்லை முதல்-மந்திரி பேச்சு


கர்நாடகத்தில் போலியோ பாதிப்பு இல்லை முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 29 Jan 2018 5:36 AM IST (Updated: 29 Jan 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் போலியோ பாதிப்பு இல்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முதற்கட்டாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கு முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

முன்னதாக பெங்களூருவில் கிருஷ்ணா இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் போலியோ பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் குழந்தைகள் போலியோ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த புகார்களும் வரவில்லை. போலியோ பாதிப்பும் இல்லை. இருந்தாலும், குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 2 முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் இன்று(அதாவது நேற்று) நடந்துள்ளது. இதில், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் 33,437 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 51 ஆயிரத்து 972 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 941 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. 2-வது கட்டமாக வருகிற மார்ச் 11-ந் தேதி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் தவறாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story