வாகனங்களை சரியாக பராமரிக்காததை கண்டித்து குப்பை லாரி டிரைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வாகனங்களை சரியாக பராமரிக்காததை கண்டித்து குப்பை லாரி டிரைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:44 AM IST (Updated: 1 Feb 2018 6:44 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் வாகனங்களை சரியாக பராமரிக்காததை கண்டித்து, குப்பை லாரிகளை இயக்காமல் பணியை புறக்கணித்து டிரைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டல அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தினமும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த லாரிகள் கடந்த ஒரு ஆண்டாக சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தால் வாகனங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து குப்பை லாரி டிரைவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வாகனங்களை இயக்காமல் பணியை புறக்கணித்து வளசரவாக்கம் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் கூறியதாவது:-

சென்னை வளசரவாக்கம் 11-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கு மட்டும் 36 லாரிகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டாக இந்த வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனால் குப்பை லாரிகள் பழுதடைந்து காணப்படுவதால் அவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் ஓட்ட தகுதி அற்றதாக உள்ளன.

குறிப்பாக சக்கரங்களுக்கு கிரீஸ் அடிப்பது மற்றும் ஆயில் மாற்றுவது இல்லை. அடிக்கடி பிரேக் பிடிக்காமல் போய்விடுகிறது. குப்பை அள்ளுவதற்கு தூக்கும் எந்திரம் சரியான முறையில் வேலை செய்வது இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்த வாகனங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் தனியாரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்களுக்கு நிலுவை தொகை வைத்து இருப்பதால் அவர்கள், வாகனங்களை பராமரிப்பது இல்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வாகனங்களை சரியாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்தும், லாரிகளை இயக்க மறுத்து நாங்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு மாதத்தில் பழுதடைந்த வாகனங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு டிரைவர்கள் அனைவரும் குப்பை லாரிகளை இயக்கி பணிக்கு திரும்பினர். 

Next Story