பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்


பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2018 1:15 AM GMT (Updated: 1 Feb 2018 1:15 AM GMT)

பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் சமேத வள்ளி, தெய்வானை கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பாலமுருகனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஹோமம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில், சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.

தேரோட்டம்

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம், வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தைப்பூச தேரோட்டத்தில், கோவில் விழாக்குழு பொறுப்பாளர் நாகரத்தினம், பழனி, அர்ஜூனன், பாத்திரம் ராஜேந்திரன், நளபாகம் முத்துவீரன், தட்டச்சாளர் ராஜேந்திரன், காமராஜ் கவுண்டர் மற்றும் பெரம்பலூர் மேட்டுத்தெரு, எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, பாரதிதாசன் நகர், மதனகோபாலபுரம், புதிய மதனகோபாலபுரம், முத்துநகர், கம்பன்நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற இருந்த தைப்பூச தேரோட்டம் சந்திர கிரகணத்தையொட்டி மதியத்திற்குள் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கோவில்களில்...

இதேபோல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியசாமி சன்னதியிலும், புதிய பஸ்நிலையம் அருகே உள்ள முத்துகுமார சுவாமி கோவிலிலும் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்ம சம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில், சண்முக சுப்ரமணியர், வள்ளி, தேவசேனாவுக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சந்திரகிரகணத்தை யொட்டி மாலையில் நடை சாத்தப் பட்டன. 

Next Story