தாயிடம் தகராறு செய்த நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது


தாயிடம் தகராறு செய்த நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2018 3:05 AM GMT (Updated: 1 Feb 2018 3:05 AM GMT)

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த நண்பரை கல்லால் அடித்துக்கொலை செய்ததாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே மதுரைராஜா கடை தெருவில் ஆண் பிணம் கிடப்பதாக நள்ளிரவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ராஜபாளையம் கோதண்டராமர் கோவில் தெருவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது45) என்பது தெரிய வந்தது. மதுவுக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் தனது நண்பரான ஜெயராமன் (22) என்பவரின் தாயாரிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.

இதனை அடுத்து இரவில் மது குடித்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நவநீத கிருஷ்ணனை ஜெயராமன் கல்லால் அடித்து கொலை செய்து அருகில் இருந்த வாருகாலில் உடலை போட்டு விட்டு சென்றுள்ளார்.

ஜெயராமனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெயராமன் நாமக்கல்லில் தனியார் என் ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

Next Story