தர்மபுரி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


தர்மபுரி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 1 Feb 2018 10:45 PM GMT (Updated: 1 Feb 2018 7:09 PM GMT)

தர்மபுரி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி நகராட்சியில் குப்பைகளை சேகரித்து கொட்டுவதற்கான குப்பை கிடங்கு தர்மபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் உள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு தினமும் வாகனங்கள் மூலம் நகராட்சியில் சேரும் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன.

தினமும் சுமார் 4 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இங்கு குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரங்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென்று குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து சென்று ராட்சதகுழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளில் பற்றிய தீயில் இருந்து கிளம்பிய கரும்புகை சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இதனால் குப்பைகிடங்கு அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டால், நிலவு புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு ஆஸ்துமா உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்கள். 

Next Story