‘கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் மனிதநேயம் தானாக வளரும்’ கலெக்டர் பேச்சு


‘கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் மனிதநேயம் தானாக வளரும்’ கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2018 10:45 PM GMT (Updated: 1 Feb 2018 7:26 PM GMT)

‘கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் மனிதநேயம் தானாக வளரும்’ என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வாரவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களுக்கு குழந்தை பருவத்திலேயே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், மனித நேயத்தையும் முழுமையாக கற்றுத்தர வேண்டும். தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக குழந்தைகள் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் மற்றவர்களோடு உரையாடுவது, விளையாடுவது கூட குறைந்துவிட்டது. தொலைக்காட்சிகளை பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போன்களை பயன்படுத்துவதும் என குடும்பத்தோடு இணைந்து இல்லாமல் தனிமையில் நேரத்தை வீணடிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலை மாறவேண்டும். கூட்டுக்குடும்பமாக வாழுகிற சூழ்நிலையும் மாறிக்கொண்டே வருகிறது. நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய பெற்றோர்களை கூட பிரிந்து சென்று தனிக்குடித்தனம் வாழும் சுயநலமிக்க குழந்தைகள் அதிகம் உருவாகி வருகின்றனர். முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட குடும்பங்களில் மனித நேயம் தழைத்து வளர்ந்து கொண்டே இருந்து வந்ததை நாம் அறிந்திருப்போம்.

அப்படிப்பட்ட குடும்பங்களில் ஏதாவதொரு பிரச்சினை ஏற்படும் பொழுது வயது முதிர்ந்தவர்கள் அவர்களின் அனுபவத்தின் மூலம் உணர்ந்து சொல்லுகின்ற அறிவுரையை ஏற்று நடக்கும் பொழுது, அந்த பிரச்சினை இல்லாமல் போய்விடும். ஆனால் இப்போது சுயநலத்தோடு மனிதர்கள் தனித்தனியாக பிரிந்து வாழுகின்ற போது, பிரச்சினைகளும், போட்டி, பொறாமைகளும் ஏற்பட்டு குற்ற செயல்கள் நடக்கின்ற அளவிற்கு சூழ்நிலை மாறிவிடுகின்றது. ஆனால் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற போது எவ்வித பிரச்சினையும் இன்றி அனைவரும் இன்பமான வாழ்க்கையை வாழ முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் குப்புசாமி நன்றி கூறினார். 

Next Story