பெங்களூருவில் பயங்கரம் பா.ஜனதா தொண்டர் குத்திக்கொலை 4 பேர் கைது


பெங்களூருவில் பயங்கரம் பா.ஜனதா தொண்டர் குத்திக்கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2018 9:15 PM GMT (Updated: 1 Feb 2018 9:14 PM GMT)

பெங்களூருவில் பா.ஜனதா தொண்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் பா.ஜனதா தொண்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பா.ஜனதா தொண்டர் கொலை

பெங்களூரு ஜே.சி.நகர் அருகே சென்னப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 28). இவர், பா.ஜனதா கட்சியின் தொண்டர் ஆவார். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னப்பா கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்ற 4 பேருக்கும், சந்தோசுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடிவிட்டார்கள். உயிருக்கு போராடிய சந்தோசை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்து விட்டார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கைது

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஜே.சி.நகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. கொலை குறித்த புகாரின் அடிப்படையில் ஜே.சி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தோசை கொலை செய்ததாக வாசீம்(28), பிலிப்ஸ்(29) ஆகிய 2 பேரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது, வாசீம், பிலிப்ஸ் ஆகியோர் தங்களின் நண்பர்களான உமர், இர்பான் ஆகியோருடன் சேர்ந்து சந்தோசை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், தற்போது உமர், இர்பான் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

மேலும் 2 பேர் சிக்கினார்கள்

இதையடுத்து தலைமறைவாக உள்ளவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் கைதான 2 பேரிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டனர். அந்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த இர்பான், உமர் ஆகியோரை நேற்று ஜே.சி.நகர் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தோஷ் கொலை பற்றி போலீசார் கூறுகையில், ‘சந்தோசுக்கும், அவரை கொலை செய்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பனை செய்வதை சந்தோஷ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக நடந்த தகராறில் கொலை நடந்துள்ளது’ என்றனர்.

பா.ஜனதா குற்றச்சாட்டு

இதற்கிடையே, பிரேத பரிசோதனைக்கு பின்னர் சந்தோசின் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. சென்னப்பா கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சந்தோசின் உடலுக்கு பா.ஜனதா தலைவர்கள், பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் துணை முதல்-மந்திரியும், தற்போதைய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஆர்.அசோக், பா.ஜனதா எம்.எல்.ஏ. கட்டா சுப்பிரமணிய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் சந்தோசுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், கர்நாடகத்தில் தொடர்ச்சியாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதாகவும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் கூறி அவர்கள் சந்தோசின் வீட்டு முன்பும், ஜே.சி.நகர் போலீஸ் நிலையம் அருகேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொலை நடந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். வருகிற 4-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள பரிவர்த்தனா யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள உள்ளதால் அதற்காக பேனர் கட்டும் பணியில் சந்தோஷ் ஈடுபட்டதாகவும், பேனர் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.10 லட்சம் இழப்பீடு

இந்த நிலையில், பா.ஜனதாவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. சந்தோஷ் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி நேற்று கூறுகையில், ‘சந்தோசின் கொலையானது அரசியல் காரணங்களால் நடக்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது. அனைத்து கொலைகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து புத்தகம் அச்சிட்டு வெளியிடப்படும். சந்தோசின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்‘ என்றார்.

இறுதி ஊர்வலம்

இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் சென்னப்பா கார்டனில் உள்ள சந்தோசின் வீட்டில் இருந்து அவருடைய உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காக்ஸ் டவுனில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள், இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.

Next Story