மாணவியிடம் 4 மாதமாக சில்மிஷம் செய்த ஆசிரியர்


மாணவியிடம் 4 மாதமாக சில்மிஷம் செய்த ஆசிரியர்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:07 PM GMT)

பேரணாம்பட்டு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியிடம் தொடர்ந்து 4 மாதமாக ஒரு ஆசிரியர் சில்மிஷம் செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ரவி என்பவர் கடந்த 4 மாதமாக தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதமாக பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தலைமை ஆசிரியை கலைவாணி, மாணவியின் பெற்றோரை அழைத்து ஏன் உங்கள் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை? என்று கேட்டார். அப்போது ஆசிரியர் ரவி சில்மிஷம் செய்ததை அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை சம்பந்தப்பட்ட ரவி மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவியை பள்ளிக்கு வரும்படியும் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஆசிரியர் ரவியை பள்ளிக்கு வர வேண்டாம் என தலைமை ஆசிரியை எச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவிகள் ஆசிரியர் ரவியை சரமாரியாக திட்டினர். இதனால் ஆசிரியர் ரவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு கொடுத்து விட்டு சென்று விட்டார்.

இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து நேற்று 10-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளிக்குழு நிர்வாகிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தலைமைஆசிரியை கலைவாணி கேட்டுக்கொண்டதையடுத்து மாணவியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து மாணவிகளிடம் ஆசிரியர் ரவி குறித்து அவர் விசாரித்தார். அப்போது “கல்வி உதவித்தொகை வழங்கும்போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், மாணவிகளின் குடும்ப வறுமையை மனதில் வைத்து அவர்களுக்கு பண உதவி செய்வது போல் நடித்து அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கி வந்ததையும் கூறியுள்ளனர்.

மேலும் சில்மிஷத்திற்கு இடம் கொடுக்காத மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை மாணவிகளை வைத்து போலியாக கையெழுத்து போட்டு முறைகேடு செய்து வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

Next Story