குஜராத் சட்டசபை தேர்தல் முடிவால் மத்திய அரசு விழித்து கொண்டதை பட்ஜெட் உணர்த்துகிறது சிவசேனா சொல்கிறது


குஜராத் சட்டசபை தேர்தல் முடிவால் மத்திய அரசு விழித்து கொண்டதை பட்ஜெட் உணர்த்துகிறது சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 2 Feb 2018 10:00 PM GMT (Updated: 2 Feb 2018 9:39 PM GMT)

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, மத்திய அரசு விழித்து கொண்டதை பட்ஜெட் உணர்த்துவதாக சிவசேனா தெரிவித்தது.

மும்பை,

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, மத்திய அரசு விழித்து கொண்டதை பட்ஜெட் உணர்த்துவதாக சிவசேனா தெரிவித்தது.

பட்ஜெட்

2018-19-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-

தேசத்துக்கு கனவுகளை விற்று அதிகாரத்துக்கு வந்த இந்த அரசு, மீண்டும் ஒருமுறை கனவு என்னும் மாயையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. நிதி மந்திரி தாக்கல் செய்த பட்ஜெட், பழைய கனவுகளையும், பழைய அறிவிப்புகளையும் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி, நிதி மந்திரியின் பேச்சில் முற்றிலும் விரக்தியை காண முடிந்தது.

பணவீக்கம் குறையுமா?


கடந்த 4 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகி விட்டது. அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிட்டது. நிதி பற்றாக்குறை, ஏற்றுமதி- இறக்குமதி போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளை சாமானியர்களால் புரிந்து கொள்ள இயலாது. பணவீக்கம் குறையுமா, குறையாதா என்பதை தான் அவர்கள் அறிய விரும்புகிறார்கள்.

இருப்பினும், பணவீக்கம் என்ற வார்த்தையை பற்றி பட்ஜெட் உரையில் பேசவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டு, பொதுமக்களுக்காக இந்த அரசு எதையும் விட்டு வைக்கவில்லை.

குஜராத் தேர்தல் முடிவு

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர், கிராமப்புற மக்கள் தங்களை விட்டு விலகுகிறார்கள் என்பதை ஆளும் அரசு உணர தொடங்கியது. குஜராத் தேர்தல் முடிவு அரசுக்கு எச்சரிக்கை மணி விடுத்ததையும், இதனால் அரசு விழித்துக் கொண்டு, பட்ஜெட்டில் கிராமப்புற மக்களுக்கு முக்கியத்துவம் அளித்ததும் தெளிவாகிறது.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

Next Story