உத்திரமேரூர் பகுதியில் உரவிற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
உத்திரமேரூர் பகுதியில் உரவிற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் குணசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் விவசாயிகளுக்கு உரங்கள் உரிய நேரத்தில், உரிய அளவில், சரியான விலையில், தரமானதாக கிடைக்கிறதா என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள 6 உரவிற்பனை நிலையங்களில் காஞ்சீபுரம் வேளாண்மை இணை இயக்குனர் பி.ஜே.குணசேகர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது உரவிற்பனை உரிமம், உரங்களை உரியமுறையில் இருப்பு வைத்தல், சரியான விலைக்கு விற்பனை செய்தல், தகவல் பலகை பார்வையில் படும்படி வைத்தல், கணக்குகள் சரியாக பராமரித்தல் போன்றவை உரகட்டுப்பாடு ஆணையின்படி உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கோ.சோமு, உத்திரமேரூர் வேளாண்மை அலுவலர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
புகார் தெரிவிக்கலாம்
பின்னர் வேளாண்மை இணை இயக்குனர் குணசேகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ரசீது இல்லாமல் விற்பனை செய்தாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தாலோ, இருப்பு வைத்துக்கொண்டே இல்லை என்று தெரிவித்தாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வட்டார வேளாண்மை அலுவலர், காஞ்சீபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story