தண்ணீர் வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சி அளிக்கும் ஒகேனக்கல்


தண்ணீர் வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சி அளிக்கும் ஒகேனக்கல்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் பாறைகளாக காட்சி அளிக்கிறது. அங்கு நீரில் மூழ்கி இருந்த முதலைவாய் குகை வெளியே தெரிகிறது.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளது. இந்த பகுதியில்தான் காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிக்கவும், இந்த பகுதியில் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று இயற்கை அழகை பார்த்து ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

கடந்த ஆண்டு கடும் வறட்சியால் ஒகேனக்கல் தண்ணீரின்றி வறண்டது. பின்னர் பருவமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் பருவ மழையின்மை மற்றும் கர் நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கியது.

தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 400 கனஅடி அளவிலேயே தண்ணீர் வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள் தற்போது பாறைகளாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளன. தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் எளிதில் சென்று பார்க்க முடியாமல் நீரில் மூழ்கி இருந்த பகுதிகளான முதலைவாய் குகை, ஜெகன்மோகினி குகை ஆகியவை தற்போது வெளியே தெரிகின்றன. இவற்றை பரிசலில் செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள். 

Next Story