கோடியக்கரையில் மீனவர்கள் வலைகளில் அதிக அளவில் சிக்கும் பால் சங்குகள்


கோடியக்கரையில் மீனவர்கள் வலைகளில் அதிக அளவில் சிக்கும் பால் சங்குகள்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில் மீனவர் வலைகளில் அதிக அளவில் சிக்கும் பால்சங்குகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து கொல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடிக்கின்றனர். இந்த மீனவர்கள் வல்லம், விசைப்படகு, பைபர்படகு போன்ற படகில் நாள்தோறும் மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்கள் பல்வேறு விதமான வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர்.

நாள்தோறும் காலை மற்றும் மாலைவேளைகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் மீன்கள் மட்டுமல்லாது பல்வேறு விதமான சங்குகளும் சிக்குகின்றன. இவற்றில் கோடியக்கரை கடல் பகுதியில் மீனவர்கள் வலைகளில் அதிக அளவில் பால்சங்குகள் சிக்குகின்றன. இவற்றை சங்கு வியாபாரிகள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து ஏலம் எடுக்கின்றனர். சராசரியாக சங்கு ஒன்று ரூ.700-க்கு விலை போகின்றன. நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 சங்குகள் மீனவர்களுக்கு கிடைக்கின்றன.

இதனை ஏலம் எடுத்த வியாபாரிகள் கொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு பெண்கள் அணியும் வளையல், மோதிரம் மற்றும் பல்வேறு அணிகலன்கள் செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்கு வருகின்றன. சங்கு வளையல்களை நவநாகரிக மங்கைகளும், வெளிநாட்டவரும் விரும்பி வாங்குவதால் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் இங்கு கிடைக்கும் சங்கு தொடர்ந்து விலை குறையாமல் நல்ல விலைக்கு போகிறது.

மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கூடுதலாக லாபத்தை கொடுக்கிறது இந்த சங்குகள். எப்போதாவது அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் வலம்புரி சங்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விலை போகும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 

Next Story