காதல் ஜோடி இறந்தது ஆணவ கொலையா? போலீசார் விசாரிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


காதல் ஜோடி இறந்தது ஆணவ கொலையா? போலீசார் விசாரிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:15 AM IST (Updated: 5 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

காதல் ஜோடி இறந்தது ஆணவ கொலையா? என்று போலீசார் விசாரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.மாத்தூர்,

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூரை அடுத்துள்ள குறிச்சிக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவ கொலைகள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஜெயங்கொண்டத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வீரத்தமிழன் மற்றும் 18 வயது சிறுமி இறந்துள்ளனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலையா? என போலீசார் விசாரணை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டியாவது 10 ஆண்டுகள் சிறை என்பதை 8 ஆண்டுகளாக குறைத்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 25 பேரை நன்னடத்தையின் அடிப் படையில் விடுதலை செய்ய வேண்டும்.

மின்வாரிய ஊழியர்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும். சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறும் வகையில் நீட் தேர்வு இருப்பது ஒருதலைபட்சமானது. காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்குரிய உரிமையை பெற்று தர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட விஷம் குடித்து இறந்த சிறுமியின் உடலுக்கு தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


Next Story