நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களை மேம்படுத்த முடிவு


நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களை மேம்படுத்த முடிவு
x
தினத்தந்தி 7 Feb 2018 5:26 AM IST (Updated: 7 Feb 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் என்.ஏ.ஹாரீஷ் கேட்ட கேள்விக்கு பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பதிலளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு கட்டமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவை சுற்றியுள்ள ராமநகர், பிடதி, நெலமங்களா, டாபஸ்பேட்டை, தொட்டபள்ளாபுரா, தேவனஹள்ளி, ஒசக்கோட்டை, ஜிகனி, எலெக்ட்ரானிக் சிட்டி, பொம்மச்சந்திரா, அத்திபெலே ஆகிய நகரங்கள் மேம்படுத்தப்படும்.

“வேலை-விளையாட்டு-வீடு“ இவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு பிடதி நகரம் மேம்படுத்தப்படுகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் இல்லாத சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நகரில் மொத்தம் 800 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாக்கடை கால்வாய் இருக்கிறது. இதில் 400 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுவிட்டன.

மீதமுள்ள 400 கிலோ மீட்டர் சாக்கடை கால்வாய் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதிக மழை பெய்யும்போது, சாந்திநகர் பி.எம்.டி.சி. பணிமனை, கோரமங்களா, ஜே.சி.ரோடு உள்ளிட்ட 8 பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஜே,.சி.ரோட்டில் உள்ள பாலம் அகலப்படுத்தப்பட்டு உள்ளன.

சாந்திநகர் பி.எம்.டி.சி. பணிமனையில் மழைநீர் நுழையாத வகையில் தனியாக ஒரு சாக்கடை கால்வாய் அமைக்க முடிவு செய்துள்ளோம். மழை பெய்யும்போது நகரில் சுமார் 300 இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு உண்டாகிறது. இவற்றை சீரமைக்க ரூ.1,200 கோடி செலவு செய்ய திட்டமிட்டு உள்ளோம். மேலும் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கும் பகுதிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் சேரும் தண்ணீர் பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகளுக்குத் தான் செல்கிறது. அந்த ஏரிகளில், நுழைவு வாயில் கதவுகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். மழைநீர் அதிகமாக வரும்போது அந்த கதவுகள் திறந்துவிடப்படும். மழை காலத்திற்கு முன்பாக பெங்களூருவில் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும்.

துமகூரு-ஓசூர் ரோட்டை இணைக்க வெளிவட்டச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்திற்கு இழப்பீடாக ரூ.8 ஆயிரத்து 100 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. சாலை அமைக்க ரூ.3,850 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த பணியை மத்திய அரசிடம் ஒப்படைக்க நாங்கள் முடிவு செய்து, மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்தோம்.

அவரும் இந்த பணியை ஏற்று நடத்துவதாக உறுதியளித்தார். ஆனால் அவர் உறுதியளித்து 1 ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆயினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வராவிட்டால் மாநில அரசே சொந்த செலவில் இந்த இணைப்பு வெளிவட்டச்சாலையை அமைக்கும். இந்த திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் பேசினார். 

Next Story