தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை தாமதத்தை தவிர்க்க புதிய திட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை தாமதத்தை தவிர்க்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:35 AM GMT (Updated: 8 Feb 2018 3:35 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை தாமதத்தை தவிர்க்க நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி,

தமிழகம் முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த விண்ணப்பங்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்ப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ‘டேப்லட் போன்’ வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கு சென்று உரிய விசாரணை நடத்தியும், ‘டேப்லட் போனில்’ படம் பிடித்தும், உடனடியாக அறிக்கை ஆன்லைன் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அந்த விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 49 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு ‘டேப்லட் போன்’ வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கி ‘டேப்லட் போன்’களை போலீசாருக்கு வழங்கினார். இனிமேல், பாஸ்போர்ட் விண்ணப்பம் மீதான விசாரணை அறிக்கையை காலதாமதம் இல்லாமல் அனுப்பி வைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். 

Next Story