மண்டப பகுதியில் உள்ள 22 கடைகளை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


மண்டப பகுதியில் உள்ள 22 கடைகளை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2018 3:45 AM IST (Updated: 9 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டப பகுதியில் உள்ள 22 கடைகளை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் மஞ்சள், குங்குமம், பூஜைப் பொருட்கள், செயற்கை நகைகள், ஆன்மிக புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் 115-ம், பூக்கள் விற்பனை செய்யும் கடைகள் 22-ம் உள்ளன. இதற்கு முறையாக கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த கடைகளுக்கு முறையான வாடகையை செலுத்தி வருகிறோம். அந்த வகையில் கடைகள் மூலமாக கோவில் நிர்வாகத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். வாடகை வசூலிக்கும் கோவில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு வசதியில் கவனம் செலுத்தவில்லை. இரவு நேரத்தில் ஒட்டுமொத்த கோவிலுக்கும் ஒரு காவலாளி, ஒரு எலக்ட்ரீசியன் மட்டுமே பணியில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் 72-வது எண் கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் முற்றிலும் எரிந்து சம்பலாயின. கடை உரிமையாளர்கள் எடுத்த துரித நடவடிக்கையால் அதிக கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

விபத்து நடந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. கூடுதல் எலக்ட்ரீசன்கள் இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்திருந்தால் தீ விபத்தை தவிர்த்து இருக்கலாம். மேலும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கோவில் எலக்ட்ரீசியன் பணியில் இல்லை. கோவில் நிர்வாகத்தின் தவறு தான் தீ விபத்துக்கு காரணம். இதனால் கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் இருந்து தப்பிப்பதற்காக தீ விபத்துக்கு கடைகள் தான் காரணம் என்று காட்டி, கோவிலில் உள்ள கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

கோவிலில் உள்ள கடைகள் தான் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. அவற்றை காலி செய்தால் ஏராளமானவர்களின் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய் விடும். இதனால் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்தும், கோவில் கடைகளை காலி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வாதாடுகையில், “மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் அகற்ற முடிவு செய்துள்ளோம். இதில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்தில் சிக்கி எரிந்தது போக மீதமுள்ள 22 கடைகளை உடனடியாக காலி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளை காலி செய்தால் மட்டுமே மண்டபத்தை சீரமைக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும்“ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வள்ளிநாயகம், “கடைகளை அகற்ற காலஅவகாசம் அளிக்க வேண்டும்“ என்றார்.

இதற்கு அரசு வக்கீல் சண்முகநாதன், “காலஅவகாசம் வழங்கினால் வீரவசந்தராயர் மண்டபத்தின் இடிந்த பகுதிகளை அப்புறப்படுத்துவது, இரும்புத் தூண்களால் முட்டுக் கொடுப்பது போன்ற பணிகளை செய்ய முடியாது“ என்றார்.

விசாரணை முடிவில், “வீரவசந்தராயர் மண்டப பகுதியில் எஞ்சியுள்ள 22 கடைகளில் உள்ள பொருட்களை வைப்பதற்கு வேறு இடத்தை கோவில் நிர்வாகம் தேர்வு செய்து அளிக்க வேண்டும். 22 கடைக்காரர்களும் தங்கள் கடைகளை நாளை (அதாவது இன்று) பகல் 12 மணிக்குள் காலி செய்து, பொருட்களை கோவில் நிர்வாகம் வழங்கிய இடத்தில் வைத்துக்கொள்ளலாம். அங்கிருந்து 3 வாரங்களுக்குள் கடை உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story