பல பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குண்டர் சட்டம் பாய்கிறது


பல பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குண்டர் சட்டம் பாய்கிறது
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பல பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கல்யாண மன்னன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.

கோவை,

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 50). அவருடைய மகள் கீதாஞ்சலி. புருசோத்தமன் தொழில் அதிபர் என்று கூறி கோடீஸ்வர பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தார்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவருடைய மகள் கீதாஞ்சலி மற்றும் கோவையில் மெட்டிஒலி திருமண தகவல் மையம் நடத்தி வந்த மோகனன், அவருடைய மனைவி வனஜாகுமாரி, புருசோத்தமனின் உதவியாளர்கள் காஜா உசேன், ஷெரீப் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

புருசோத்தமன் கோவை, சென்னை, தேனி, நாமக்கல், விருதுநகர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

புருசோத்தமன் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குமுதவள்ளி என்ற பெண்ணிடம் 850 பவுன் நகைகளை மோசடி செய்துள்ளார். சிங்காநல்லூரை சேர்ந்த ஜோஸ்பின் சாந்தினியிடம் (45) ரூ.6 லட்சம் ரொக்கப்பணம், 25 பவுன் நகை மோசடி செய்ததாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த இந்திரா காந்தி என்ற பேராசிரியையும் புருசோத்தமனிடம் ரூ.1 கோடி கொடுத்து ஏமாந்திருப்பதாக சென்னை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறிஇருப்பதாவது:-

கணவரை பிரிந்த பேராசிரியை இந்திரா காந்தி 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தபோது கோவையில் உள்ள உறவினர் ஒருவர் மூலமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையத்தில் ஜாதகத்தை கொடுத்துள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மூலம் இந்திராகாந்தியை புருசோத்தமன், அவரது மகள் கீதாஞ்சலி ஆகியோர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது புருசோத்தமன் மனைவி இறந்த பிறகு 17 வருடங்களாக மறுமணம் செய்வதற்காக பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.

அதோடு, கீதாஞ்சலி ‘நீங்கள் பார்ப்பதற்கு எனது தாய் போலவே இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் எனது அம்மா மீண்டும் கிடைத்து விட்டதாக உணர்வதாக பாச மழை பொழிந்துள்ளார். இதை நம்பி அவர் புருசோத்தமனை திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் புருசோத்தமன் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அவசரமாக ரூ.1 கோடி தேவைப்படுகிறது என கூறியதோடு, பைனான்சியர் ஒருவரை வரவழைத்து இவரது வீட்டை அடமானம் வைத்து பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

இதனால் சந்தேகமடைந்த இந்திராகாந்தி புருசோத்தமன் பற்றி விசாரித்தபோது இப்படி பல பெண்களை ஏமாற்றி யிருப்பதும், மோசடிக்கு அவரது மகள் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சென்னை நகர குற்றப்பிரிவு போலீசார் புருசோத்தமன், மகள் கீதாஞ்சலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்களை தவிர கோவையை சேர்ந்த சுசீலா, சபீதா, ஈரோடு சித்ரா உள்பட 8 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த பெண்கள் அனைவருடனும் புருசோத்தமன் அவர்களது வீட்டிலேயே சில மாதங்கள் தங்கி ஏமாற்றி இருக்கிறார். இந்த புகார்களின் அடிப்படையில் அந்தந்த பகுதியில் புருசோத்தமன் மீது வழக்குபதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே புருசோத்தமன் மீது கோவை மாநகர குற்றப் பிரிவிலும், வெளிமாநிலங்களிலும் 40 வழக்குகள் உள்ளன. எனவே புருசோத்தமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story