வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளி மோசடி; கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது


வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளி மோசடி; கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2018 4:45 AM IST (Updated: 9 Feb 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளி மோசடி வழக்கில் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் அருகே உள்ள இனாம்வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் செல்வபிரகாஷ் (வயது 35). இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளிக்கட்டி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரூரை சேர்ந்த விக்னேஷ் (29), சக்திவேல் (47), சதீஷ்குமார் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), சிங்கதுரை (27) ஆகிய 5 பேர் வெள்ளிக்கட்டிகளை விலைக்கு கேட்டனர். இவர்களில் சக்திவேல் கரூரில் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார்.

செல்வபிரகாஷ் தனது நண்பர்களான கலைமணி, பாபுசங்கர் ஆகியோருடன் சேர்ந்து சுமார் 500 கிலோ வெள்ளிக்கட்டியை கொடுத்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக்கூறப்படுகிறது. ஆனால், 5 பேரும் வெள்ளிக்கட்டிக்கான பணத்தை கொடுக்கவில்லை. குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் கேட்டு வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், குறித்த காலம் முடிந்த பின்னரும் வெள்ளிக்கட்டிக்கான பணத்தை 5 பேரும் கொடுக்கவில்லை. இதனால், செல்வபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் கரூரில் உள்ள சக்திவேலின் வெள்ளி கடைக்கு சென்றனர். அங்கு கடை மூடப்பட்டிருந்தது.

இதனால் தாங்கள் ஏமாந்து விட்டதை அறிந்து அவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் கொடுத்தனர். வெள்ளி மோசடியில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மரியமுத்து, சரவணன், தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த சக்திவேல், சதீஷ்குமார், ராமச்சந்திரன், சிங்கதுரை ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளையும், 2 சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த மோசடி கும்பலுக்கு சக்திவேல் தலைவனாக செயல்பட்டார். இவர் மீது உடுமலைபேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கும், மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீஸ் நிலையத்தில் சாமியார் ஒருவரை கடத்தியது தொடர்பாக ஆள் கடத்தல் வழக்கும் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் விக்னேஷ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story