ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்


ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:15 AM IST (Updated: 9 Feb 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்துக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும் கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர். தற்போது சம்பா சாகுபடி நடைபெற்று வருவதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகளை மட்டுமே எடை போட்டு கொள்முதல் செய்வதற்கு வசதி உள்ளது.

போதிய இட வசதி இல்லாத காரணத்தால் அங்கு தற்போது 50 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தங்களது நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெளியே சாலையோரத்தில் வெட்டவெளியில் அடுக்கி வைத்துள்ளனர்.

இது தவிர ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே தனியார் இடத்திலும் ஏராளமான நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மூட்டைகள் எடை போட்டு கொள்முதல் செய்யப்படாமல் இருந்ததால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 3 நாட்களாக காத்திருந்தனர்.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென விருத்தாசலத்தில் சாரல் மழை பெய்தது. உடனே விவசாயிகள் விரைந்து சென்று தார்பாய் போட்டு நெல் மூட்டைகளை மூடினர். இருப்பினும் ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதையடுத்து விவசாயிகள் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே தனியார் இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் இருக்கும் இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், பெரிய மழை ஏதும் பெய்தால் எங்களது நெல் மூட்டைகள் அனைத்தும், அதில் நனைந்து வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க எங்களது நெல் மூட்டைகளை உடனே எடைபோட்டு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story