தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் ராமதாஸ் பேட்டி


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி,

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதில் மத்திய அரசு தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 35 மாதங்கள் ஆகியும் மருத்துவமனை அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கையை நானும், டாக்டர் அன்புமணி ராமதாசும் பலமுறை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். வருகிற 2020-ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் ஊழல் நடந்திருப்பதாக ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது ஊழல் உறுதி செய்யப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நடந்த ஊழலில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து நீதிபதி தலைமையில் முறையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 4,748 ஆசிரியர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வடமாவட்டங்களில் 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பணியிடங்களில் 4 பேர் மட்டுமே இருக்கும் சூழலில் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இடமாற்றம் கேட்கும் ஆசிரியர்களிடம் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் வழங்குவது கல்வித்துறையில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

இத்தகைய முறைகேட்டின் காரணமாக வடமாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 40 சதவீத பணியிடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். எனவே கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வி என ஒட்டுமொத்த கல்வியும் விலைபேசி விற்கப்படுகிறது. கட்டாய கல்வியை கட்டணமில்லாமல் தரமாகவும், சுமையில்லாமல் விளையாட்டுடன் கூடியதாகவும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நடக்கும் பினாமி ஆட்சியில் அத்தகைய தரமான கல்வி சாத்தியமில்லை. பா.ம.க. ஆட்சி அமையும்போது அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். ஆற்றில் மணல் அள்ளுவதன் மூலம் அமைச்சர்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கூடாது என்பதற்காக பா.ம.க. தொடர்ந்து போராடும். விவசாய விளைநிலங்களில் கியாஸ் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 9 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மாற்று கூட்டணி பா.ம.க. தலைமையில் அமையும். அந்த அணி 3-வது அணியாக இல்லாமல் முதல் அணியாக களத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். அப்போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் குமரன், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள், சண்முகம், இமயவர்மன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story