பெங்களூருவில் தலித் வீட்டில் இரவு தங்கிய எடியூரப்பா
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தலித்துக்கள் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டார். மேலும் அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
பெங்களூரு,
ஏழை மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளவும், அவர்களுடன் கலந்துரையாடல் செய்யும் வகையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் தலைவர்கள் தலித் மற்றும் ஏழை, எளிய மக்களின் வீட்டில் தங்கி உணவு சாப்பிட முடிவு செய்தனர்.
அதன்படி பெங்களூரு மெஜஸ்டிக் அருகே லட்சுமணபுரி பகுதியில் உள்ள தலித் வகுப்பை சேர்ந்த முனிராஜ் என்பவரது வீட்டிற்கு நேற்று இரவு எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், உள்பட பா.ஜனதாவினர் சென்றனர். அங்கு சென்றதும் எடியூரப்பாவுக்கு சாம்பார்சாதம் வழங்கப்பட்டது. அதை அவர் விரும்பி சாப்பிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டு அறிந்தனர். பின்னர் இரவு முனிராஜ் வீட்டில் படுத்து தூங்கினர்.
முன்னதாக எடியூரப்பா, முனிராஜ் வீட்டிற்கு வந்த போது அவரை மேளதாளத்துடன் வரவேற்றனர். அவருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.