பானிபூரி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகள்- பணம் திருட்டு போலீசார் வலைவீச்சு


பானிபூரி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகள்- பணம் திருட்டு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் பானிபூரி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துறையூர்,

துறையூர் மலையப்பன் சாலையில் வசித்து வருபவர் இசக்கிபாண்டி(வயது 35). பானிபூரி வியாபாரி. இவர் வழக்கமாக மாலை 6 மணிக்கு வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு இசக்கிபாண்டியும், அவருடைய மனைவியும் வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 2 மோதிரங்கள் மற்றும் கை சங்கிலி என மொத்தம் 6 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது வீட்டின் அருகில் 3 மர்ம நபர்கள் நின்று கொண்டிருப்பதை கண்ட அவர், அக்கம், பக்கத்தினர் துணையுடன் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால், மர்ம நபர்கள் புறவழிச்சாலை வழியாக திருடிய பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவலின்பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த திருட்டு குறித்து இசக்கிபாண்டி கொடுத்த புகாரின்பேரில், துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இசக்கிபாண்டி வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெறுவது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக் கதாகும்.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே உள்ள மாருதி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர். இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் தொடந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரும் இதுவரை பிடிபடவில்லை.

திருட்டு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வது இல்லை என்றும், அந்த புகார்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை கைது செய்திருந்தால் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்காது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இனிமேலாவது பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story