வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது


வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பு வதாக கூறி, பணம் மோசடி செய்து போலி விமான டிக்கெட்டை கொடுத்து ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பட்டு,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர்கள் ராஜதுரை (வயது45), முருகவேல் (42). இவர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைக்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பூபேஸ் (36), நீடாமங்கலத்தை சேர்ந்த அழகேசன் (24) ஆகியோரிடம் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள் தாய்லாந்து நாட்டில் வேலை செய்வதற்காக உங்களுக்கு விசா வாங்கி விட்டோம். பிப்ரவரி 10-ந்தேதி தாய்லாந்து செல்வதற்கான விமான டிக்கெட்டையும் வாங்கி விட்டோம். அதை பெற இன்னும் தலா ரூ.50 ஆயிரம் கொண்டு வாருங்கள் என கூறி இருக்கிறார்கள்.

இதனை உண்மை என நம்பிய ராஜதுரையும், முருகவேலும் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக தலா ரூ.50 ஆயிரம் பணத்துடன் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை சந்தித்த பூபேசும், அழகேசனும் பழைய தேதியில் எடுக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளை காட்டி அவர்களை விமானநிலையத்திற்குள் அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை அறிந்த ராஜதுரையும், முருகவேலும் உடனடியாக இதுபற்றி விமானநிலைய போலீசில் புகார் செய்தனர்.

விமானநிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியய்யா உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினார். இதில் போலியான விமான டிக்கெட்டை அவர்கள் கொடுத்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து பூபேசையும், அழகேசனையும் விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்களிடம் வேறு யாரும் பணம் கொடுத்து ஏமாந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story