வேலூர் உட்கோட்டத்தில் ஒரே நாளில் 15 ரவுடிகள் கைது ‘கோம்பிங் ஆபரேஷன்’ மூலம் போலீசார் அதிரடி


வேலூர் உட்கோட்டத்தில் ஒரே நாளில் 15 ரவுடிகள் கைது ‘கோம்பிங் ஆபரேஷன்’ மூலம் போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் உட்கோட்டத்தில் ‘கோம்பிங் ஆபரேஷன்’ மூலம் ஒரே நாளில் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்,

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஒரே இடத்தில் 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று கூடினார்கள். தகவல் அறிந்த போலீசார் 75 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது பலர் தப்பி ஓடிவிட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வேலூரை சேர்ந்த ரவுடிகளும் கலந்து கொண்டிருக்கலாம் எனவும், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் எனவும், மேலும் தப்பிய ரவுடிகள் சிலருக்கு வேலூரில் உள்ள ரவுடிகள் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் வேலூர் தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ரவுடிகளின் வீடுகள் அமைந்துள்ள இடம், அவர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் கண்காணித்தனர்.

இந்த நிலையில் வேலூர் உட்கோட்டத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் ‘கோம்பிங் ஆபரேஷன்’ என்ற பெயரில் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, ஓல்டு டவுன், சார்பனா மேடு, குட்டை மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், சந்தேகத்துக்குரிய வீடு, பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வேலூர் உட்கோட்டத்தில் ‘கோம்பிங் ஆபரேஷன்’ மூலம் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட சார்பனாமேடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே ரவுடி ஜானி மற்றும் வசூர்ராஜா கூட்டாளிகள் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடிகளை சுற்றி வளைத்து 7 பேரை கைது செய்தனர். அப்போது ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பிவிட்டார்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் கொசப்பேட்டையை சேர்ந்த சின்னா என்கிற சந்திரன் (வயது 31), விஜயன் (36), முரளி (32), சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த சேட்டு (41), தோட்டப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (28) மற்றும் குமார் (40), கஸ்பாவை சேர்ந்த காதர் (46) எனவும், தப்பியோடிய நபர் வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த உதயா என்கிற உதயகுமார் எனவும், ரவுடிகள் அனைவரும் பெண்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.59 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூரில் ஆள்கடத்தல், கொலை, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் முக்கிய ரவுடிகளான வசூர்ராஜா-ஜானி ஆகியோரையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய முடியவில்லை. தலைமறைவாக உள்ள முக்கிய ரவுடிகளான வசூர் ராஜா, ஜானி, ஓல்டு டவுன் உதயா என்கிற உதயகுமாரை பிடிக்க போலீசார் ‘கோம்பிங் ஆபரேஷனை’ தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 5 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். வேலூர் உட்கோட்டத்தில் ‘கோம்பிங் ஆபரேஷன்’ மூலம் ஒரே நாளில் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கும் சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அல்லது சென்னையில் தப்பிய ரவுடிகளுக்கு வேலூரில் ரவுடிகள் அடைக்கலம் கொடுத்துள்ளனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story