106 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


106 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் உள்ள ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயத்தில் 106 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயம் உள்ளது. இங்கு வாழ்ந்த ஸ்ரீநாராயண பிரமேந்திர சுவாமிகள் கடைசி 15 ஆண்டுகள் பிடி மணலும், தண்ணீரும் சாப்பிட்டு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 1912-ம் ஆண்டு ஜீவ சமாதியடைந்தார்.

இதையடுத்து அவருடைய பக்தர்கள் அவர் வாழ்ந்த இடத்தில் மடாலயம் கட்டி மூலவரை கற்சிலையாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 30 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலையையும் நிறுவினர். அதற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேளை பூஜைகள் செய்து வழிபாடு நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மடாலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழிபாட்டிற்காக மடாலய நிர்வாகி சின்மயானந்த சரஸ்வதி சுவாமிகள் மடாலயத்தை திறக்க சென்றார். அப்போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 106 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் உற்சவர் சிலை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயத்தில் 106-வது மகா குருபூஜை 3 நாட்கள் நடைபெற இருந்த நிலையில், உற்சவர் சிலை திருட்டு போன சம்பவம் இங்கு வரும் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story